×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆடு, மாடுகளை விரட்டி கடிக்கும் வெறிநாய்கள்

காட்டுமன்னார்கோவில், அக். 31: காட்டுமன்னார்கோவில் அருகே ஆடு, மாடுகளை வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடிப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தை அடுத்துள்ள சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.புத்தூர் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். மேலும் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக வெறிநாய்கள் தொல்லையால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியூரில் இருந்து தப்பி வந்த வெறிநாய் ஒன்று இந்த ஊரில் தஞ்சம் புகுந்தது. அந்த வெறிநாய் மற்ற நாய்களையும் கடித்ததால் அவற்றுக்கும் வெறிநோய் பரவியது. மேலும் அந்த நாய் அங்குள்ள கருவேலங்காட்டில் பதுங்கியிருந்து அவ்வப்போது கிராமத்திற்கு வந்து நாய்களையும், கால்நடைகளையும் கடித்து விட்டு சென்று விடுகிறதாம். இதனால் இங்குள்ள நாய்களுக்கு ரேபிஸ் நோய் பரவி வாயில் நுரைதள்ளியவாறே அவ்வழியே செல்லும் ஆடு, மாடுகளை விரட்டி விரட்டி கடித்து வருகின்றன.

இதுவரை 3 மாடுகள், 2 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துள்ளது. இதனால் அந்த ஆடு, மாடுகளும் நாய்களைப்போலவே விநோத சத்தம் எழுப்பியபடி பொதுமக்களை கடிக்க வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். நாய்கடிப்பட்ட 3 மாடுகள், 2 ஆடுகள் இறந்துவிட்டன. இதனால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வெறிநாய்களுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்த வெறிநாய் கடித்து 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, தற்போது கிராமப்பகுதிகளில் வெறிநாய்களை பிடிக்கும் எந்த திட்டமும் இல்லை. எனவே தீயணைப்பு மற்றும் மீட்புபடையினரிடம் உதவி கோருமாறு தெரிவித்தார்.

இதையடுத்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், தங்கள் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தி அந்த நாய்களை பிடிக்க வேண்டும், கிராம மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். எனவே நாய் கடித்த கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும், நாய் கடித்து பாதிக்கப்பட்ட மாட்டின் கொட்டகையை சுத்தம் செய்து குளோரின் தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,Katumannarkoil ,
× RELATED முகப்பேர் பகுதியில் பல்லி கிடந்த...