×

தீபாவளி பொருட்கள் வாங்க புதுகை கடைவீதியில் மக்கள் அலைமோதல் அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி காமிரா கண்காணிப்பு

புதுக்கோட்டை, அக்.27: தீபாவலி பொருட்கள் வாங்க புதுக்கோட்டை கடைவீதியில் மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் தடுக்க சிசிடிவி காமிரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பட்டாசு, புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் புதுக்கோட்டை நகரில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக கீழராஜவீதி, பிருந்தாவனம் முக்கம், மேலராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மர்மநபர்கள் சிலர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் ஆங்காங்கே ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல கீழராஜவீதி மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட 3 இடங்களில் போலீசார் உயர்கோபுரங்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருட்டை தடுக்கும்பொருட்டு, நகரின் முக்கிய கடைவீதிகளில் மாவட்ட போலீஸ் சார்பில் 32 சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கேமிராக்களை ஆய்வு செய்ய கீழராஜவீதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருந்து கண்காணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகரின் முக்கிய கடைவீதிகளான கீழராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்பட எந்தஒரு வாகனங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல புதுக்கோட்டை ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னமராவதி :பொன்னமராவதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படிப்படியாக சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

முன்பெல்லாம் திபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பொன்னமராவதி கடைவீதியில் அதிக அளவு கூட்டம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் மக்களிடம் தீபாவளி பொருட்கள் வாங்க கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. ஆயினும் தீபாவளி பண்டிகையினை கொண்டாட நேற்று காலை முதல் ஜவுளிக்கடை, மளிகைக்கடை, பட்டாசுக்கடை, ரெடிமேட்கடை எண்ணெய் கடை போன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அண்ணா சாலையில் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது. அண்ணா சாலையில் இருபுறமும் அதிக அளவு இருசக்கர வாகனத்தை நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்னமராவதி காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ