×

தொழில் நெருக்கடியால் போனஸ் சதவீதம் குறைந்தது

கோவை,  அக். 25:கோவையில் தொழில் நெருக்கடியால் தொழிலாளர்களுக்கு போனஸ் சதவீதம் குறைந்தது. தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் பிரதான தொழில் நகரங்களுள் ஒன்றாக கோவை மாவட்டம் உள்ளது. இங்கு ஜவுளி, விவசாயம், வாகன உதிரிபாகங்கள், மோட்டார் பம்ப்செட், வெட்கிரைண்டர், வார்ப்புகள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் இன்ஜினியரிங் சார்ந்த தொழில்கள் உட்பட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஒவ்வோரு தொழிலாளிக்கும் போனஸ் தொகையை கொடுப்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8.33 (ஏறத்தாழ ஒரு மாத ஊதியம்) சதவீதத்தில் இருந்து நிறுவனத்தின் லாபத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் வழங்க வேண்டும் என்று 1965ம் ஆண்டு போனஸ் பட்டுவாடா சட்டம் வலியுறுத்துகிறது. கடந்த கால கட்டங்களில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் அனைத்து தொழில்களும் நலிவை சந்தித்துள்ளன.

அனைத்து உற்பத்தி துறைகளிலும் சுமார் 50 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. தொழில் மிகுந்த நெருக்கடியை சந்தித்து  வரும் இந்த சூழலில், தொழிலதிபர்கள் தீபாவளி போனஸ் வழங்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். வெவ்வேறு தொழில்துறையினரும் 8.33 சதவீதம் என்ற குறைந்தபட்ச தொகையையே போனசாக வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெரிய மில்கள் இயங்கி வருகின்றன.  இதுபோக பல சிறு, குறு மில்களும்  இயங்கி வருகின்றன. பல மில்களில் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. சில மில்களில் தங்களது வருவய்க்கு ஏற்ப 11, 12.5, 14 18 ஆகிய சதவீதங்களில் போனஸ் வழங்கப்பட்டு  வருகிறது.

தென்மாவட்டங்களில் செயல்படும் மில்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மில் அதிபர்கள் மட்டும் போனஸ் தொகையை 2 தவணைகளாக கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு செல்வராஜ் கூறினார்.ஓ.இ. மில்கள் (ஓஸ்மா) சங்க தலைவர் ஜெயபால் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதங்களாக தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே நிறுவனங்கள் இயக்கப்படுகின்றன.பருத்தி விலை குறைந்த போதிலும், கழிவு பஞ்சுகள் விலையை குறைக்க நூற்பாலைகள் மறுத்து வருகின்றன. இதனால் பல மில்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. போனஸ் கொடுக்க  சிரமமான சூழலில்தான் தொழில்முனைவோர் உள்ளனர். இருந்தபோதிலும் தொழிலாளர்கள் திருப்திக்காக குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதத்தை ஓ.இ. வழங்கி வருகின்றன. மிக மோசமான நிலையில் உள்ள மில்கள் போனஸ் தொகையில் பாதியை தீபாவளி பண்டிகைக்கும், மீதியை பொங்கலுக்கும் தருவதாக அறிவித்துள்ளன.’’ என்றார்

Tags : industry crisis ,
× RELATED தொழில் நெருக்கடியால் காலியாகும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள்