×

மைனஸ் இல்லாத முட்டை விலை நிர்ணயம் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் என்இசிசி அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு

நாமக்கல், அக்.25: மைனஸ் இல்லாத முட்டை விலை நிர்ணயம் என்ற என்இசிசியின் அறிவிப்புக்கு, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க உயர்நிலை குழு கூட்டம், நேற்றிரவு அதன் தலைவர் சின்ராஜ் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விற்பனையில் என்இசிசி வரும் 30ம் தேதி முதல் அறிவித்துள்ள மைனஸ் இல்லாத முட்டை விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. என்இசிசியின் புதிய அறிவிப்புக்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, சின்ராஜ் எம்பி கூறியதாவது: என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, இன்று (25ம்தேதி) முதல்  மைனஸ் 25 பைசா என்ற அடிப்படையில் பண்ணையாளர்கள் முட்டை விற்பனை செய்யவேண்டும். வரும் 30ம் தேதி முதல் மைனஸ் இல்லாத முட்டை விலை நிர்ணயம் என்ற என்இசிசியின் கருத்து, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முட்டை விற்பனைக்கு ஏற்புடையதாக இருக்காது. இதன் மூலம் கிராமங்களுக்கு முட்டை கொண்டு செல்வது தடைபடும். மேலும், முட்டை அழுகும் பொருளாகும். நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. எந்த பண்ணையில் விலை குறைவாக கிடைக்கிறதோ, அங்கு தான் முட்டை வியாபாரிகள் செல்வார்கள். என்இசிசி அறிவிக்கும் விலையில் இருந்து குறைவாக ஒரு பண்ணையாளர் விற்பனை செய்தால், அவரை என்இசிசியால் கட்டுபடுத்த முடியாது. உற்பத்தி செய்யும் பொருளை லாபத்துக்கு விற்பனை செய்யும் உரிமை, அனைத்து பண்ணையாளர்களுக்கும் இருக்கிறது.

நாமக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு முட்டை எடுத்து செல்லும்போது, வியாபாரிகளுக்கு டிரான்ஸ்போர்ட் செலவு என்ற பெயரில் ஒரு முட்டைக்கு 25 காசு குறைத்து விற்பனை செய்யும் நடைமுறை, இந்த தொழிலில் பல ஆண்டாக இருக்கிறது. இதை திடீரென மாற்ற முடியாது. விலை குறைவாக இருந்தால் தான், மக்கள் அதிகம் வாங்குவார்கள். எனவே, என்இசிசியின் மைனஸ் இல்லாத முட்டை விலை என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. எனவே, எப்போதும் போல என்இசிசி விலையில் இருந்து மைனஸ் 25 பைசா என்ற அடிப்படையில் தான் பண்ணையாளர்கள் முட்டை விற்பனை செய்ய வேண்டும் என சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை முட்டை வியாபாரிகளும்  பின்பற்றுவார்கள். இவ்வாறு சின்ராஜ் எம்பி தெரிவித்தார்.

30 ஆண்டுக்கு மேலாக என்இசிசி நிர்ணயம் செய்யும் முட்டை விலையை அடிப்படையாக வைத்து தான், தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்து வருகிறது. சில்லறை விலையும் என்இசிசி விலையையொட்டி தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. முட்டை விலை நிர்ணயத்தில் என்இசிசிக்கும், கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. தற்போது என்இசிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அதற்கும் பண்ணையாளர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags : Poultry farmers ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு...