×

விபத்து, மாசு, ஒலியில்லாத தீபாவளி கொண்டாட அழைப்பு

கிருஷ்ணகிரி, அக்.25:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்து, மாசு மற்றும் ஒலியில்லாத தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும், குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள் என்றும் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை பல்கி பெருகி செவிட்டுத்தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டுத்தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, அதிக சத்தமுள்ள பட்டாசுகளை தவிர்த்து விபத்தில்லா தீபாவளிப பண்டிகையை அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாட வேண்டும். அதன்படி, உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம்.

 திறந்த வெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள இடங்களில், வான வெடி மற்றும் ராக்கெட் வெடியையும் வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். தவறினால், சிறை தண்டனையும் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வெங்கடேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம்