×

மனச்சிதைவு நோய் பாதித்தவரின் ஆயுள் தண்டனை ரத்து

மதுரை, அக். 25: நெல்லை மாவட்டம், தென்காசி அருகே வல்லத்தைச் சேர்ந்தவர் குமார் (எ) செல்வக்குமார். ஒரு கொலை வழக்கில் 2014ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘கொலை நடப்பதற்கு முன்பாகவே மனுதாரர், ‘சிசோப்ரேனியா’ என்ற மனச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சம்பவத்திற்கு பிறகு சிறையில் இருக்கும் காலத்தில் கூட தொடர் சிகிச்சை பெற்றுள்ளார். மனச்சிதைவால் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கொலை செய்துள்ளார்.

அவருக்கு தற்போது கூட கொலை செய்ததற்கான காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, அவரது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  அவரை நம்பி குடும்பமும் உள்ளது. கொலைக்கு முன்பும், பின்பும் தொடர் சிகிச்சையில் இருந்ததற்காக மருத்துவ பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும்போது மனுதாரருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, ஆயுள் தண்டனை வழங்கிய நெல்லை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.  மனுதாரரை அவரது குடும்பத்தினர் முறையாகவும், பாதுகாப்பாகவும் கவனித்து கொள்ள வேண்டும். அவரது மனச்சிதைவு நோய்க்கு தேவையான சிகிச்சையை நெல்லை மருத்துவமனையில் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Tags : Revocation ,
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்...