×

சிவகாசி சாட்சியாபுரம் கேட்டில் ரயில்வே மேம்பாலப் பணி தொடங்குவது எப்போது?

சிவகாசி, அக். 24: சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே கேட் பகுதியில், ரயில் வரும் நேரங்களில், இருபுறமும் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப்படுகின்றனர். எனவே, மண் பரிசோதனையோடு கிடப்பில் போடப்பட்ட மேம்பாலப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி மேற்கு பகுதி சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், ஹவுசிங் போர்டு, இந்திரா  நகர், ஸ்டேட் பேங்க் காலனி, இ.பி.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் சிவகாசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் ரயில்வே கேட்டை கடந்து நகருக்குள் வரவேண்டும். இதேபோல, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் நகருக்குள் வருவதற்கு ரயில்வே கேட்டை கடந்துதான் வரவேண்டும். இந்நிலையில், காலை  8.40 மணிக்கு ரயில்வே கேட் பூட்டப்படுகிறது. அதன்பின் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க 15 நிமிடம் ஆகிறது. காலையில் மதுரை-செங்கோட்டை  செல்லும் ரயில், சிவகாசியை கடந்து செல்ல, ரயில்வே கேட் மூடப்படுகிறது. மீண்டும் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்களும், டூவீலர்களும் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ரயில்வே கேட் திறந்தவுடன் வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர்  முண்டியத்து, கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போதும், போதும் என்றாகி விடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதையடுத்து ரயில்வே  கேட் அருகே, மண் பரிசோதனை மற்றும் தரையில் பாறை எவ்வளவு ஆழத்தில் உள்ளது என இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு எவ்விதப் பணியும் நடைபெற வில்லை.  சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, ரயில்வேகேட்டையொட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் அருகே  ரயில்வே பாலம் உள்ளது. முன்பு இப்பாலத்தின் வழியாக, கேட் மூடப்படும்போது,  டூவீலர்கள் சென்று வந்தன. ஆனால் தற்போது, பாலத்தின் உயரம் குறைவாகவும்,  பாலத்தின் பாதைகளில் முட்கள், கழிவுநீர் செல்வதால் பாலத்திற்கு அடியில்  உள்ள பாதையை பயன்படுத்த முடியவில்லை.

தற்காலிக தீர்வு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கும் வரை, சிவகாசி மேற்குப் பகுதி மக்கள் சிரமமின்றி நகருக்குள் வருவதற்கு மாற்று ஏற்பாடாக, இ.எஸ்.ஐ., மருந்தகம் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு கீழே, டூவீலர்கள் செல்லும் வகையில், வசதி செய்தால், சிரமம் குறையும் என பொதுமக்கள் கருதுகின்றனர். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, ரயில்வே நிர்வாகம், கவனம் செலுத்த வேண்டும் என
வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Sivakasi Saatchiapuram Gate ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு