×

கூடலூர் ஒட்டான்குளம் கரையில் மருத்துவக்கழிவு கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஆணையாளர் எச்சரிக்கை

கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களான சிரிஞ்சுகள், ஊசிகள், சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் போன்றவற்றை தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. இந்த கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவமனைகளில் பெற்றுக்கொண்டு ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் இன்சினரேட்டர், மைக்ரோவேவ்ஸ் போன்ற எரிப்பான்கள் மூலம் உயர்வெப்ப நிலையில் எரித்தல் முறையிலும், மறு சுழற்சி முறையிலும், ஆழப் புதைப்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது. ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் இவ்விதிகளை பின்பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்களை இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களிலோ கால்வாய் பகுதியிலோ கொட்டிவிடுகின்றனர். இந்நிலையில் நேற்று கூடலூர் ஒட்டான்குளம் நீர்நிலைப்பகுதி அருகே ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள், கிளவுஸ் அடங்கிய மருத்துவ குப்பை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. சிலர் இரவு நேரங்களில் இச்செயலைச் செய்கின்றனர். இதுகுறித்து நேற்று கூடலூர் விவசாயிகள், நகராட்சி ஆணையாளர் சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து ஆணையாளர் உத்தரவில் கூடலூர் நகராட்சி சுகாதார ஊழியர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை குளக்கரையிலிருந்து அகற்றினர். இதுகுறித்து ஆணையாளர் சேகர் கூறுகையில், மருத்துவ கழிவுகள் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….

The post கூடலூர் ஒட்டான்குளம் கரையில் மருத்துவக்கழிவு கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஆணையாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Ottankulam ,Kudalur Ottankulam ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!