×

சுரமுள் வேலி, தேனீ திட்டம் முடக்கம்

கோவை, அக்.24:  கோவை மதுக்கரை, கோவைப்புதூர், கரடிமடை, தொண்டாமுத்தூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. குடியிருப்புகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் யானைகள் வருகின்றன. பேரூர், மாதம்பட்டி, பச்சாபாளையம், நரசீபுரம், ஆலாந்துறை, செம்மேடு உள்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் யானைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைகளின் வருகையை கட்டுப்படுத்த அகழி, சுரமுள் வேலி திட்டங்களை அமலாக்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர் பலி வாங்கியதாக மதுக்கரை சரகத்தில் 2 யானைகள் மயக்க ஊசி போட்டு வேறு வனத்தில் விடப்பட்டது. மயக்க ஊசி போட்டதில் ஒரு யானை இறந்தது. காட்டு யானைகளை அடக்க சாடிவயலுக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் ஓய்வில் இருக்கின்றன. வன எல்லை கிராமங்களில் கும்கி யானை ரோந்து பணியும் முடங்கி கிடக்கிறது.  தொண்டாமுத்தூர், மதுக்கரை வட்டாரத்தில் கடந்த 3 ஆண்டில் 10 பேர் யானை தாக்கி இறந்தனர். யானைகள் விவகாரத்தில் தமிழக அரசு மீது பொதுமக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘‘தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் செய்கிறார்கள். ஆண்டுதோறும் யானைகள், காட்டுபன்றிகளால் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை பயிர்கள் நாசமாகி வருகின்றன. யானைகளை தடுக்கும் திட்டங்களை வனத்துறையினர் செய்யவில்லை. அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி பாதிப்பை காட்டிலும் யானை, காட்டு பன்றிகளால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அகழி, மின்வேலி, சுரமுள் வேலி திட்டம் நடக்கவில்லை. தேனீ மூலமாக யானைகளை விரட்ட திட்டமிடப்பட்டது. பரிட்சார்த்த அடிப்படையில் கூட இந்த திட்டத்தை செயல்படுத்த வனத்துறை முன் வரவில்லை. நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடிகள் கட்டப்பட்டு வருகிறது. யானைகள், காட்டு பன்றிகள் தண்ணீர் தேடி விவசாய தோட்டத்திற்கு வருகின்றன. அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயிகளையும், பொதுமக்களையும் தேடி வந்து பிரச்னைகளை கேட்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் நாங்கள் எங்கள் பிரச்னைகளை சொல்லி வீதியில் தவிக்கிறோம், ’’ என்றனர்.

Tags :
× RELATED மோப்பிரிபாளையத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம்