×

பொன்னேரியில் பரவுகிறது மர்ம காய்ச்சல் பெண் உட்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

பொன்னேரி, அக். 24:  பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டால் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பெண் உள்பட 3 பேரக்கு டெங்கு காய்ச்சல் என தெரிய வந்ததால் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பொன்னேரி சுற்றுபகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீருடன் கலந்து கழிவுநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பொன்னேரி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட 32 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் தினேஷ், மோகனவள்ளி, குமாரபிரகாஷ் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாள்தோறும் வெளிநோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில், காய்ச்சல் பரிசோதனைக்காக ஆய்வகத்திலும் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பொன்னேரியில் தேங்கும் குப்பை, கழிவு நீரை பேரூராட்சி நிர்வாகம் உரிய முறையில் அகற்றாததால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் தெருக்களில் செல்லும் மழைநீர் செல்ல கால்வாய்  இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மாவட்ட நிர்வாகம் காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு துப்புரவு பணிகளை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 இதற்கிடையே மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் தலைமையில்  சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள்  டெங்கு கொசுக்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்  செய்வதுடன் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் அகற்றுதல் உள்பட பல்வேறு சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Dengue fever spread ,Ponneri ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்