×

மணமேல்குடி பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

மணமேல்குடி, அக்.24:மணமேல்குடி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி மாவட்டம் தோறும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் பல பகுதிகளில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் காணாமல் போனது. இதனால் தண்ணீர் வடிய வழியில்லாமல் வீடுகளையும், முக்கிய வீதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து வருகிறது. மழைஅறிவிப்பு வந்தவுடன் அதிகாரிகள் வடிகால் வாரிகளை கண்டரிந்து தூர் வாரியிருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும் என்றும் பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர். மணமேல்குடி பகுதியில் தொடர்ந்து பகல் இரவு எனக் கடும் மழைபெய்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக மழைக்காக ஏங்கிய மக்களுக்கு மழை போதும் போதும் என்கிற அளவுக்கு பெய்து வருகிறது.

இந்நிலையில் பெய்யும் மழை முறையாக அந்தந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் சென்று சாலை, தெருக்கள், குடியிருப்புகள் என தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்ட வடிகால் வாரிகள் அனைத்தும் தூர்ந்துபோய், வடிகால் வாரி இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. இதனால் தண்ணீர் குளங்களுக்கு செல்ல முடியாமல் குடியிருப்புகள் தெருக்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மணமேல்குடி குலச்சிறையார் நகர் ஒரு காலத்தில் விளைச்சல் நிலமாக இருந்தது. தற்போது மனைக்கட்டுகளாக மாறி 150க்கும் மேற்பட்டவீடுகள் உள்ளன. தற்போது இந்த நகர் தண்ணீரின் நடுவே உள்ளது. தண்ணீர் வெளியேற்ற வழியில்லாமல் கடந்த 7 நாட்களாக தேங்கியே நிற்கிறது. தண்ணீரில் விஷ புச்சிகள் மிதந்து வருவதால் மக்கள் பயத்துடன் உள்ளனர். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் காய்ச்சல் பயத்தில் உள்ளனர்.

இயற்கையின் வழியை மறித்து வீடுகள் கட்டப்பட்டு பின்பு இயற்கையை குறைசொல்வது நம் வாடிக்கையாகி விட்டது. மேலும் வடக்கிழக்கு பருவமழை தொடங்கும் அறிவிப்பு வந்தும், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாத அதிகாரிகளை பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.
மேலும், மணமேல்குடியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் இன்று வரை வடியாமல் குளம்போல் தேங்கி கிடக்கின்றன. பொன்னமராவதி: பொன்னமராவதியில் நேற்று மாலை சிறிது நேரம் பெய்த மழைக்கே அண்ணா சாலை முழுவதும் குளம்போல் மழைநீர் நிரம்பியது. மழைநீர் வடிய போதிய வழியில்லாததால் சாலையும் சேறும் சகதியுமானது. தீபாவளி நேரம் என்பதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவசர ஊர்தியான ஆம்புலன்சும் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்மண் நிறத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வடிகால்களை தூர்வார வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ