×

பணிநீக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்காத தனியார் தொழிற்சாலையை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி, அக். 23:  உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே பஞ்செட்டி பகுதியில் மின் உற்பத்தி செய்ய தேவையான  உதிரிபாகங்கள் தயாரிக்கும்  தொழிற்சாலை உள்ளது. இதில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் தொகை 1 கோடியை அவரவர் கணக்கில் செலுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் துவங்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் அதில் பணியாற்றி வந்த 127 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில், மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா என பல்வேறு போராட்டங்கள் நடத்திய தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நல ஆணையர், மாவட்ட ஆட்சியர், பொன்னேரி கோட்டாச்சியர், வட்டாச்சியர் உட்பட பல அதிகாரிகள் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும்் பயன் இல்லை. இந்நிலையலில் மீண்டும் பணி வழங்குவதுடன் பல்வேறு கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்செட்டி பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டு தொழிற்சாலையை குடும்பத்தினருடன் முற்றுகையிட பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன  போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை  வலுகட்டாயமாக  இழுத்து சென்று கைது செய்தனர்.

தகவல் அறிந்ததும்  பொன்னேரி வட்டாச்சியர் மணிகண்டன் வந்தார்.  “வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என  போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.   மாவட்ட தலைவர் கே.விஜயன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாநில  குழு உறுப்பினர் கலாம், பூபாலன், சந்திரசேகரன், சிபிஎம் மாநில குழு  உறுப்பினர் சுந்தரராசன், மாவட்ட செயலாளர் கோபால், பகுதி செயலாளர் தவமணி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துளசிநாராயணன் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : factory ,layoffs ,
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...