×

விசாரணையின் போது தாக்கிய எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு 1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2016ம் ஆண்டு எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீஸ்காரர் சுப்பிரமணி என்பவர், என்னை சந்தித்து, ‘உன்னை இன்ஸ்பெக்டர் நேரில் வந்து சந்திக்க சொல்கிறார்,’ என்று கூறினார். அதன்படி நான் காவல் நிலையம் சென்றேன். அங்கு, என்னை பல மணிநேரம் காத்திருக்க வைத்தனர். பின்னர் அப்போதையை இன்ஸ்பெக்டர் தேவராஜ், போலீஸ்காரர் சுப்பிரமணி ஆகியோர்  சேர்ந்து என்னை அரை நிர்வாணமாக்கி, காரணமே கூறாமல் லத்தியால் தாக்கினர். பின்னர், என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே, என்னை தாக்கி, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் உள்பட இருவரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே அவர்களுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு, இன்ஸ்பெக்டர் தேவராஜிடம் இருந்து 75 ஆயிரமும், போலீஸ்காரர் சுப்பிரமணியனிடம் இருந்து 25 ஆயிரமும் வசூலித்துக்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : MGR Nagar ,police force ,interrogation ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!