×

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி டவுன்ஹாலில் நகை திருடிய மாமியார், மருமகன் கைது

கோவை, அக்.17: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி கோவை டவுன்ஹால் பகுதியில் 5 பவுன் தங்க நகை திருடிய மாமியார் மற்றும் மருமகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காந்திபுரம் மற்றும் டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளையர்கள் பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிப்பதை தடுக்கும் பொருட்டு கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீசார், சாதாரண உடை அணிந்து டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை கோவை டவுன்ஹால் பிரகாசம் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல் ஆய்வாளர் வேளாங்கன்னி தலைமையில், உதவி ஆய்வாளர் மாரிமுத்து, ஏட்டுக்கள் உமா, கார்த்தி, பூபதி மற்றும் சிம்பன் ஆகிய தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேருந்தில் இருந்து அவசர கதியில் மூதாட்டி ஒருவர் இறங்கினார். அவருடன் ஒரு வாலிபரும் இருந்தார். இருவரும் பதற்றத்துடன் இருந்ததை பார்த்த போலீசார் மூதாட்டி மற்றும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதில் பயணித்த கணுவாய் பகுதியை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுனிதா (33) என்பவர் வைத்திருந்த பையில் இருந்து 5 பவுன் எடையுள்ள தங்க நகைகளை அவர்கள் திருடியது தெரியவந்தது. இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க நகையை திருடிய மூதாட்டி, அதனை பேருந்தின் பின்பக்கம் இருந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு நைசாக பேருந்தில் இருந்து ஒருவருக்குப்பின் ஒருவராக இறங்கியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில், அந்த மூதாட்டி பழனிக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி (65) என்பதும், அந்த வாலிபர் மூதாட்டியின் மருமகன் ரவிச்சந்திரன் (39), என்பதும் தெரியவந்தது. இந்த மூதாட்டி ஏற்கனவே வெவ்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags : jewelery ,town hall ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ்...