மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய கன மழை

மஞ்சூர், அக்.16:  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் இரவு நேரங்களில் துவங்கி விடிய, விடிய இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய கொட்டிய அடை மழையில் மஞ்சூர் சுற்றிலும் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது. மஞ்சூர் அருகே உள்ள பூதியாடா பகுதியில் ஒரே நேரத்தில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் கெச்சுகட்டி, முள்ளிமலை, காந்திபுரம் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் நடவடிக்கையின் பேரில் பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று மரங்களை வெட்டி அகற்றி சீரமைத்தனர். இச்சம்பவத்தால் மஞ்சூர் பூதியாடா இடையே 5 மணிநேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதேபோல் மெரிலேண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் பெரிய மரத்தின் வேர் பகுதி பெயர்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர் ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

Tags :
× RELATED அதிகாலை கொட்டித்தீர்த்த மழையால் குன்னூரில் 15 இடங்களில் மண்சரிவு