×

ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நெல் நடவு

பள்ளிபாளையம், அக்.15: பள்ளிபாளையம்  வட்டாரத்தில், கூலி ஆட்கள் பற்றக்குறை காரணமாக, விவசாயிகள் இயந்திரம்  மூலம் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணை கிழக்கு  கால்வாய் பாசனத்தின் கடைமடை பகுதியான பள்ளிபாளையத்தில், தற்போது நடவு  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் நடவு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதால், கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய  பணிகளில் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காததால், விவசாய கூலி ஆட்கள் பலரும்  விசைத்தறி, நூற்பு ஆலை, சாயச்சாலைகள் என பல்வேறு தொழில்களை  தேடிச்சென்றுவிட்டனர். தற்போது விவசாய பணிகளுக்கான கூலி ஆட்கள்  கிடைப்பதில்லை. வயலை உழவு செய்ய டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. கோனோ  வீடர் கருவியால் வயலில் களையெடுக்கும் பணிகள் எளிதாகிவிட்டது. நெல்  அறுவடையிலும் இயந்திரம் பயன்படுத்துவதால், எளிதாக விரைவாக அறுவடை பணிகள்  செய்யப்படுகிறது. இந்த ஆண்டு  பள்ளிபாளையம் வட்டாரத்தில் 150 எக்டேர் பரப்பளவில் இயந்திரம் மூலம் நெல்   நடவு செய்யப்படுகிறது. இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, நடவு  கூலியாக ₹2 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. நடவு இயந்திரம் குறித்து  விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, புதுப்பாளையம்  விவசாயி பூபதிராஜ் வயலில், நேற்று இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிபாளையம்  வேளாண் உதவி இயக்குனர் அசோக்குமார், அட்மா திட்ட மேலாளர் ஹேமலதா மற்றும்  நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவர்கள், இந்த நிகழ்வில் கலந்து  கொண்டனர்.


Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்