×

வாகனம் பறிமுதல் கறம்பக்குடி அருகே வரத்து வாரிகள் சீரமைக்காததால் பரிதவிக்கும் பாசன விவசாயிகள்

கறம்பக்குடி, அக்.15: கறம்பக்குடி அருகே 10 ஆண்டுகளாக வரத்துவாரிகளை சீரமைக்காததால் பாசன விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மொத்தம் 39 ஊராட்சிகள் அமைந்துள்ளன. ஏராளமான விவசாயிகள் உள்ளனர். கீராத்தூர், பாப்பாப்பட்டி, முதலிப்பட்டி, செங்கமேடு, குலந்ரான்பட்டு, ராங்கியன் விடுதி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் கறம்பக்குடி தாலுக்காவில் கடை மாடை பகுதிகளாக உள்ளது. இந்த பகுதியில் வருடம்தோறும் காவிரிஆறு கல்லணை கால்வாய் பகுதியில் இருந்து வரும் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக ராங்கியன் விடுதி ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் உள்ளனர். விவசாயிகள் அதிகம் பேர் உள்ளனர். இந்த கிராமத்தில் ராங்கியன் குளம் என்ற பாசன குளம் அமைந்துள்ளது. 90 எக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன பகுதியாக உள்ளது. காவிரி கல்லணை கடைமடை பகுதி வாய்க்கால் மூலம் புதுஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு பல ஆண்டுகளாக விவசாயிகள் வருடம்தோறும் விவசாயம் செய்து வந்தனர்.

புது ஆறு மூலம் தண்ணீர் வருவதற்கு முன்பு விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு அருகில் உள்ள ஊரணி புறம் பொதுப்பணிதுறை மூலம் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரத்து வாய்க்கால்கள் அனைத்தையும் தூர் வாரி சீரமைத்து ராங்கியன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டும் தற்போது வாய்க்கால் சீரமைத்து உள்ள நிலையில் புது ஆறு கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் சென்று கொண்டுள்ள வேளையில் வாய்க்கால் கரைமேல்பகுதியில் குடியிருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வெட்டுவாக்கொட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்கொல்லை கிராம மக்கள் (30 குடும்பத்தினர்) சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்களை தூர் வாரி சீரமைக்க அனுமதி தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக ராங்கியன்விடுதி விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளனர். மேலும் வரத்து வாய்க்கால்கள் செல்லும் பகுதியில் கூத்து ஊரணி மேல் கரை மற்றும் கீழ் கரை பகுதி வரத்து வாய்க்கால்கள் செல்லும் பகுதியில் பயன் பெரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒரத்தநாடு தாலுகா நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள்அளித்ததன் விளைவாக ஒரத்தநாடு தாசில்தார் வருகை தந்து ஆய்வு செய்து விட்டு சென்றார். அதன் பிறகு வெட்டாமல் ஆக்கிரமித்து வைத்துள்ள வரத்து வாய்க்கால்கள் செல்லும் பகுதியில் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக ராங்கியம்விடுதி கிராம பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாசன விவசாயிகள் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த கிராமத்தில் பிரச்னை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் இருந்து வருகிறோம். உடனடியாக புதுக்கோட்டை கலெக்டர் சம்மந்தப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வரத்துவாய்க்கால்கள் அனைத்தையும் முழுமையாக வெட்டி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக ராங்கியன்விடுதி பாசன குளமான ராங்கியன்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தையும் நடத்துவோம் என்றனர்.

Tags : Irrigation growers ,Karambakkudy ,
× RELATED கறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது