கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி, அக். 15: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும், திருப்பூவனம், திருமங்கை நகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி என்றெல்லாம் வரலாற்றில் இடம்பெற்றதுமான கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் சமேத பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே கொடியேற்றி, 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில்  செண்பகவல்லி அம்மன் கோயில்  அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் திருப்பதி ராஜா மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான தேரோட்டம் வரும்22ம் தேதியும்,  25ம் தேதி ஐப்பசி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.   உடன்குடி: இதே போல் பழமையும், புராதன பெருமையுமிக்க குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நேற்று  அதிகாலை 5மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

 மாலை 6மணிக்கு அப்பர்சுவாமிகள் உழவாரப்பணி வீதியுலா, 7மணிக்கு வாகனச்சீவி, ரிஷப வாகனத்தில் பலிநாதர் வீதியுலா, இரவு 8.30மணிக்கு அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதியுலா நடந்தது. இதே போல் திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. தினமும் மாலை 6.30மணிக்கு கோயில்  திருக்கூடத்தில் தேவாரப் பன்னிசை, சமயசொற்பொழிவு நடக்கிறது. வரும் 23ம்தேதி காலை 7.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல்,  24ம்தேதி திருக்கல்யாணக் காப்புக்கட்டுதல்,  25ம்தேதி காலை 6மணிக்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சுவாமி காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 12மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் நடைபெறும். 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் அறம் வளர்த்த நாயகிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. காலை  7.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பட்டினப்பிரவேசம் எழுந்தருளல் நடைபெறும். ஏற்பாடுகளை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார், செயல் அலுவலர் ஆம்ரித் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>