×

குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

அருப்புக்கோட்டை, அக். 10: குடிநீர் கேட்டு, அருப்புக்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை நகராட்சி 8வது வார்டில் விவிஆர் காலனி, 9வது வார்டில் சொக்கலிங்கபுரம், எம்டிஆர் நகர் வடக்கு பகுதியில் உள்ள 4, 5, 6 தெருக்களில் நகராட்சி குடிநீர் இணைப்பு இல்லாததால், நகராட்சி லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை ஒரு வீட்டிற்கு 15 குடம் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் 2 லாரிகளில் ஒன்று பழுதானதால், மற்றொன்று ‘எப்சிக்கு’ சென்றதாலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், ஒரு குடம் குடிநீர் ரூ.12க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும், மற்ற புழக்கத்திற்கும், மினிபவர் பம்புகளிலும், அடிபம்புகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் புழக்கத்திற்கான தண்ணீரை ஒரு குடம் ரூ.5க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு, நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். உதவி செயற்பொறியாளர் காளீஸ்வரி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : office ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...