×

எந்தப் பணியும் நடப்பதில்லை... எல்லிங்கநாயக்கன்பட்டியில் நிர்வாகம் முடக்கம்

விருதுநகர், அக். 10: விருதுநகர் அருகே, எல்லிங்கநாயக்கன்பட்டியில், எந்தவித பணியும் நடக்காமல், நிர்வாகம் முடங்கிக் கிடப்பதாக, ஊராட்சி செயலர் மீது பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் மூன்று மேல்நிலைத்தொட்டிகள் உள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் செயல்பாட்டில் உள்ளது. மற்ற இரண்டு தொட்டிகள் காட்சிப் பொருளாக உள்ளன. இது குறித்து பலமுறையிட்டும் நடவடிக்கை இல்லை. 8 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்துள்ளது. மோட்டார்கள், மின்சாதனங்கள், தெருவிளக்குகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து கிடக்கின்றன. மயானச்சாலையில் உள்ள நீராவி குளம் தார்சாலையும், சுற்றுச்சுவரும் இடிந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. பல குடிநீர் தொட்டிகளில், குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்களை ஒப்புக்கு நடத்துகின்றனர். வாறுகால்களை தூர்வாராததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஊரின் நடுவில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு இடையூராக உள்ளது. கண்மாயில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. கிராமத்தின் செயல்படாத நிர்வாகம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஊராட்சி செயலாளர் கிராம மக்களை அவதூறாக பேசுகிறார். உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்காவிடில், கிராம மக்கள் சாலை மறியல் செய்வோம்’ என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை