×
Saravana Stores

புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயம் சார்பில் புனிதபயணம் சென்றவர்களுக்கு சாத்தான்குளத்தில் வரவேற்பு

சாத்தான்குளம், அக்.10:  சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயப் பங்கைச் சேர்ந்தவர்கள் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளுக்கு கடந்த 22ம்தேதி புனித பயணம் மேற்கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் திருப்பயணக் குழுவினருக்காக சிறப்பு  திருப்பலி நிறைவேற்றி ஜெபித்து, பங்குத்தந்தை ஜோசப் ரவிபாலன் வழியனுப்பி வைத்தார். அடைக்கலாபுரம் புனித ஜோசப் அறநிலையத்தின் பங்குதந்தை (பொறுப்பு) ரூபன்  தலைமையில் திருப்பயண குழுவினர் செப்.23ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றனர். தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களைச் சேர்ந்த 15 பேர்களுடன், அருட்தந்தையர்கள் வின்சென்ட், அருள்ஜோசப், கலிஸ்டஸ் முன்னிலை வகித்து ஜெபித்து வழியனுப்பினர்.

இதில் இயேசு பிறந்த பெத்லகேம், வாழ்ந்த நாசரேத், எருசலேம் தேவாலயம், ஒலிவ மலையில் தமிழில் செதுக்கப்பட்டுள்ள இயேசுவின் போதனைகள், இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் ஆறு, கானாவூர் கற்சாடி, டெட் சீஇ (சாக்கடல்) கடவுள் மோசேக்கு நெருப்பு வடிவில் தோன்றிய முட்செடி, 10 கட்டளைகள் வழங்கிய சீனாய் மலை, இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை, ஏரோது அரசனுக்குப் பயந்து எகிப்தில் அன்னை மரியாள் இயேசுவுடன் வாழ்ந்த வீடு, எகிப்தின் பிரமிடுகள், இஸ்ரேல் நாட்டின் வாழை, திராட்சை தோட்டங்கள், விரிந்து கிடக்கும் கிரானைட் மலைகள், பாலைவனங்கள் என 80க்கும் மேற்பட்ட நிகழ்விடங்களை 10 நாட்கள் வழிகாட்டி அருள்எட்வின் தலைமையில் கண்டுகளித்தனர்.  இந்நிலையில் புனித பயணம் சென்று திரும்பியவர்களுக்கு சாத்தான்குளம் இறைமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED கலியாவூரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு