×

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

விருத்தாசலம், அக். 10: குடிநீர் கேட்டு விருத்தாசலம்-பாலக்கொல்லை நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சிக்கு உட்பட்ட குருவங்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், கடந்த மூன்று மாதமாக குடிநீர் தொட்டிக்கு நீரேற்றம் செய்யாமலும், ஏற்றப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்காமலும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறுகின்றனர்.

இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கும் குடிநீர் தேவையை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் இருந்ததாக கூறுகின்றனர். இதனால் குடிநீர் கிடைக்காமல் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அருகிலுள்ள கிராம பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வந்துள்ளனர். விவசாய நிலங்களில் குடிநீர் எடுக்கும்போது, விவசாய நில உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல் அருகில் உள்ள பகுதிக்கு குடிநீர் எடுக்க சென்றபோது குருவங்குப்பம் பகுதி மக்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது அப்போது உங்கள் பகுதிக்கு சென்று தண்ணீர் எடுங்கள் என கூறி அவர்கள் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குருவங்குப்பம் பகுதி மக்கள் திடீரென நேற்று விருத்தாசலம்- பாலக்கொல்லை நெடுஞ்சாலையில் குருவங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டிவரும் ஆலடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலடி சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம்-பாலக்கொல்லை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள் முதல் பல்வேறு பணிகளுக்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Tags :
× RELATED உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில்...