×

‘காய்ச்சலுன்னு யார் வந்தாலும் மாத்திரை கொடுக்காதீங்க’ மருந்து வணிகர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

கோவை. அக்.4: ‘‘காய்ச்சல் பாதிப்புகளுக்கு உள்ளாகி மருந்துக்கடைகளுக்கு வருபவர்களுக்கு மருத்துவர் மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வழங்க வேண்டாம்,’’ என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், இந்தாண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கிரமாப்புறங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தலைமையில்  அவரது அலுவலகத்தில் மருந்து வணிகர்களுடன் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  அப்போது மருந்து வணிகர்களிடம் அவர் கூறியதாவது: காய்ச்சல் என்று கூறி மருந்து கேட்பவர்களிடம் மருத்துவரை பார்த்தீர்களா? என்று கேளுங்கள்.

மருந்து சீட்டு இல்லாமல் தன்னிச்சையாக மருந்துகளை வழங்க வேண்டாம். சில மருந்து கடைகளில் காய்ச்சலுக்கான ஊசியும் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருபவர்களை மருத்துவரை பார்க்க அனுப்பி வையுங்கள். கடை வாசலில் அலங்காரத்திற்கான செடிகள் வைத்துள்ளீர்கள். அது சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் டெங்கு கொசு உற்பத்தியாக வழி வகை செய்துவிடும். எனவே வாரம் ஒருமுறை அவற்றை பராமரியுங்கள். கடைகளில் பிரிஜ் இருந்தால் அதன் அடிப்பாகத்தில் தேங்கும் நீரை அகற்றுங்கள்.  மருத்துவத்துறையில் இருக்கக்கூடிய வணிகர்கள் டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி பொது மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு பானுமதி கூறினார். அப்போது பல்வேறு சந்தேகங்களை மருந்து வணிகர்கள் கேட்டனர். அதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 100க்கு  மேற்பட்ட மருந்து வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : anyone ,
× RELATED வைட்டமின் மாத்திரைகள்...