×

லேப் டெக்னீசியன் கொலையில் 3 பேர் சிக்கினர்

ஓசூர், அக்.4: ஓசூர் அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் லேப் டெக்னீசியன் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பர் உட்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தமிழக-கர்நாடக எல்லையான கக்கனூர் கிராமத்தில், கடந்த 25ம் தேதி இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில், பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தமிழக எல்லையில் சடலம் கிடந்ததால், பாகலூர் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ள போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராம பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மளவள்ளி காவல் நிலையத்தில், மைசூர் சித்தப்பா சர்க்கிள் பகுதியைச் சேர்ந்த கௌதம்(24) என்பவரை, கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் காணாமல் போன கௌதம் என்பதும், அதே பகுதியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், கொலையான கெளதம், அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் வட்டிக்கு பணம் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கௌதமின் உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில், அதே பகுதியைச் சேர்ந்த கௌதமின் நண்பரான அருண்(24) மற்றும் அவரது நண்பர்களான மஞ்சுநாத்(25), ரவிக்குமார்(22) ஆகியோரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட கௌதம், தனது நண்பரான அருணுக்கு ₹50 ஆயிரத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்தை அருண் திருப்பி கொடுக்கவில்லை. இதனால், வட்டியுடன் சேர்த்து ₹2.50 லட்சத்தை அடிக்கடி அருணிடம் கேட்டு, கௌதம் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், ஆவேசமடைந்த அருண், தனது நண்பர்களான மஞ்சுநாத், ரவிக்குமாரிடம் கௌதமை கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி, கடந்த 24ம் தேதி, பணத்தை கொடுத்து விடுவதாக கூறி, கௌதமை காரில் அருண் அழைத்துச் சென்றார். அவர்களுடன் மஞ்சுநாத், ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். பின்னர், கக்கனூர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, கௌதமை கொலை செய்து அங்கு சடலத்தை வீசிவிட்டு தப்பியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காரை பறிமுதல் செய்ய போலீசார் கர்நாடக விரைந்துள்ளனர். மேலும், பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

Tags : Lab technician ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...