×

புது தாங்கல் ஏரியில் மண் ெகாள்ளை லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்: தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம்: மேற்கு தாம்பரம் முல்லை நகரில் உள்ள புது தாங்கல் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனம், இந்த ஏரியை சீரமைக்க முன்வந்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று,  பணிகளை தொடங்கியது. அப்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், தொண்டு நிறுவனம் சார்பில், சன் பவுண்டேஷனை அணுகி உதவி கேட்டதை அடுத்து, சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்த ₹40 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி முறையாக நடந்து வருகிறது.இந்நிலையில், ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட பகுதியில் உள்ள கட்டிட கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் தனியாருக்கு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை அந்த தனியார் நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தி, 6 யூனிட் கொள்ளளவு கொண்ட டாரஸ் லாரிகள் மூலம் இரவு, பகலாக ஏரியிலிருந்து மண் எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 4000 லோடுக்கு மேல் ஏரியிலிருந்து மண் எடுத்து விற்றுள்ளதாகவும் பொதுமக்கள் தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் புகார் அளித்தனர்.அதன்பேரில், நேற்று காலை எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் ஏரியில் மண் எடுத்துச் சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து, முறையான ஆவணங்களை கேட்டனர். அப்போது, ஆவணங்கள் இல்லாமல் மண் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே மண்ணை கொட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, பொதுமக்கள் அவற்றை மடக்கிப் பிடித்தனர்.

தகவலறிந்து வந்த தாம்பரம் வட்டாட்சியர் சாந்தகுமாரி, முறையாக சோதனை செய்யாமல், அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது வாகனத்தை மறித்து அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் உடனடியாக இங்கு வர வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் உத்தரவில், ஏரியில் உள்ள கட்டிட கழிவுகளை மட்டும் அகற்ற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கு வந்து பார்த்தபோது 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் அள்ளப்படுகிறது. பல லாரிகளுக்கு அரசு மைன்ஸ் பர்மிட், பாஸ் எதுவும் இல்லை. இங்கு ஒரு கும்பல் உட்கார்ந்து கொண்டு இரவு, பகலாக மண் எடுத்து வருகிறது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே சம்பவ இடத்துக்கு டி.ஆர்.பாலு எம்பி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags : New Thangal Lake ,
× RELATED புது தாங்கல் ஏரியில் மண் கொள்ளை...