×

உத்திரமேரூர் அருகே பரபரப்பு சம்பவம் கல்குவாரியை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் கொலை முயற்சி?

உத்திரமேரூர், அக். 2: உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கல்குவாரிகள், கல்அறவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளால், பலரது வீடுகளில் விரிசலும், மக்களுக்கு சுவாசக்கோளாறு  உள்பட பல பிரச்னைகளால், பாதிப்படைகின்றனர். இதையொட்டி, இந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தவேளையில், கடந்த 13ம் தேதி பழவேறி கிராமத்தில் புதிதாக கல்குவாரி துவங்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள், அங்கு சென்று தடுத்து நிறுத்தினர். மேலும், கலெக்டரிடம் புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனை கண்டித்து, பழவேறி கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பரமநாதன் (65) நேற்று முன்தினம் கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் பரமநாதன் மற்றும் அவரது அண்ணன் விவசாயி ஆதிகேசவன் (67) ஆகியோர் நேற்று மதியம் விவசாய பொருட்கள் வாங்குவதற்கு பைக்கில் வாலாஜாபாத் சென்றனர்.  அங்கு பொருட்கள் வாங்கி கொண்டு பழவேறிக்கு புறப்பட்டனர்.

அருங்குன்றம் அருகே வந்தபோது, அங்குள்ள கல்குவாரியை சேர்ந்த லாரி, பைக்கை முந்தி சென்றது. இதில், வளைவில் லாரி டயரில், பைக் சிக்கியது. இதில் பரமநாதன், அவரது அண்ணன் இருவரும் லாரி டயரின் அடியில் சிக்கினர். பைக்கோடு  2 பேரது கால்களும் நசுங்கின. இதை பார்த்த டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பிவிட்டார். இதயைறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். விபத்து ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த 2 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அதில், உடன்பாடு  ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழவேறி கிராமத்தில் நேற்று முன்தினம் கல்குவாரியை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், ஓய்வுபெற்ற ஆசிரியரை கொலை செய்வதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா?  அல்லது தற்செயலாக நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Kulwari ,
× RELATED கீரப்பாக்கம் ஊராட்சியில்...