×

இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பல்வேறு அமைப்பினர் மனு

திருச்சி, அக்.1: நாச்சிக்குறிச்சி இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர், கட்சியினர் திருச்சி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, நாச்சிக்குறிச்சி இரட்டை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெண்கள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். குடிமகன்களின் தொல்லை அதிகரிக்கும். எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் வாசன்நகர் வாக்கர்ஸ் அசோசியேசன் சார்பில் அமைதிப் பேரணி நடந்தது.

டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வாஸன் நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கம், வாசன் நகர் வாக்கர்ஸ் அசோசியேசன், தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது), நாம்தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் என பலதரப்பட்ட அமைப்புகளும், கட்சிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் நேற்று மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : organizations ,anti-collector ,task bar ,bus stop ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!