×

விருத்தாசலம் அருகே பரபரப்பு மழைநீரில் நின்று போராட்டம்

விருத்தாசலம், அக். 1: விருத்தாசலத்தில், தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி மழை நீரில் நின்றுகொண்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவேகானந்தர் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர் அனைத்தும் வெளியே செல்ல வழி இன்றி தெருவிலேயே தேங்கி நிற்பதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மழைநீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீரும் ஒன்றாய் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் உருவாகும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி உணவு அருந்த முடியாத சூழ்நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் அன்றாடம் பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மெயின் ரோடு பகுதிக்கு சென்றடைகின்றனர்.

இது குறித்து விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று தேங்கியுள்ள மழைநீர் மற்றும் சாக்கடை நீரில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக தேங்கி உள்ள இந்த மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் கொசுக்கள் அதிகமாகி குழந்தைகளை கொசுக்கள் கடித்து நோய்களை உருவாக்கி வருகிறது. கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு பலமுறை நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே, உடனடியாக மழைநீரை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் விருத்தாசலம்-கடலூர் சாலையில் தாலுகா அலுவலகம் முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : rainwater ,Vrithyasalam ,
× RELATED மழை நீர் வடிய வழியில்லாததால் 200 ஏக்கர் சம்பா அழுகியது: விவசாயிகள் கவலை