×

திருச்சுழி அருகே மழைக்கு இடிந்து விழுந்த சாலையோர தடுப்புச்சுவர் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

திருச்சுழி, அக். 1: திருச்சுழி அருகே, சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி செல்லும் சாலையில் சவ்வாசுபுரம் மற்றும் குள்ளம்பட்டி கிராமங்களுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இந்த இரண்டு கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சவ்வாசுபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலையோரம் கல்குவாரி பள்ளம் உள்ளது. இதில் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருந்தது. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் இருந்தது. மேலும், தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் அனுப்பியும், நடவடிக்கை இல்லை. இது குறித்து கடந்த ஜூன் மாதம் நமது நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சவ்வாசுபுரம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் ஊரைச் சேர்ந்த  மாணவ, மாணவியர் அருப்புக்கோட்டை மற்றும் கல்லூரணியில் படித்து வருகின்றனர். தினசரி ஊரிலிருந்து அருப்புக்கோட்டை மெயின்ரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறோம். சாலையையொட்டி பள்ளம் இருப்பதால், இரவு நேரத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது மழைக்கு சாலைத் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Road Accidents in Accident ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு