×

பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு மனு பதிவு செய்ய கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்

சிவகங்கை, அக்.1: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு முன் மனுவை பதிவதற்கு நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தாலுகா அலுவலகங்கள், ஒன்றிய தலைநகரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளது. மேலும் அவ்வப்போது கிராமங்களில் குறை தீர் மனுக்கள் பெறும் முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாம் முதியோர், விதவை உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு பெற்று குறைகளை தீர்ப்பதற்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு முகாம்களில் பொதுமக்களுடைய குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர் கூட்டத்திற்குதான் ஏராளமான கிராமத்தினர் வந்து மனு அளிக்கின்றனர்.

 காலை 10 மணியிலிருந்து மதியம் வரை 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இதில் குடிநீர், சாலை வசதி, அரசு மற்றும் தனியார் இடம் ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு, சுடுகாடு வசதி, முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். கலெக்டரிடம் அளிக்கும் முன் மனுவை பதிவு செய்து ரசீது பெற வேண்டும். இவ்வாறு பதிவு செய்ய சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கியூவில் காத்திருக்க வேண்டும். அலுவலகத்திற்குள் காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருந்து அலுவலகத்திற்கு வெளியே வரை இவ்வாறு நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருப்பதால் முதியோர் மற்றும் உடல் நலிவடைந்தோர், பெண்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பின்னர் கலெக்டரிடம் மனுவை அளிக்க மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். இவ்வாறு நீண்டநேரம் நிற்பவர்கள் கடும் அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே மனுவை பதிவு செய்வதற்கு கூடுதல் ஆட்கள் நியமனம் செய்யவேண்டும். அல்லது மனு கொடுப்பதற்காக அமர்ந்திருக்கும் அரங்கத்திலேயே மனுவை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் கூறுகையில், சமந்தப்பட்ட அலுவலகங்களைவிட கலெக்டர் அலுவலகத்தில் அளித்தால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு அளிக்க வருகிறோம். குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை. இங்கு அளிக்கப்படும் மனுக்களில் பெரும்பாலானவை ஏற்கனவே எந்த அலுவலகத்தில் தீர்வு கிடைக்காமல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்களோ அதே அலுவலகத்திற்குதான் அனுப்பப்படுகிறது. இவ்வாறு தீர்வு கிடைக்காமல் மீண்டும், மீண்டும் வருவதால் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது. பொதுமக்களை மேலும் அவதிப்படுத்தி காத்திருக்க செய்யாமல் மனு பதிவு, மனுவை பெறுவது உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : personnel ,public ,
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!