×

வழிந்தோட வழியில்லை மழைநீர் தேங்கும் அரசு அலுவலகங்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம்

சிவகங்கை, அக்.1:  சிவகங்கை நகர் பகுதியில் அரசு அலுவலகங்களை சுற்றிலும் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. சிவகங்கை கலெக்டர், எஸ்பி அலுவலகம் முதல் சுமார் 30க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் என அனைத்தும் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இங்கு ஏ, பி, சி, டி, இ பிளாக்குகள் என அரசு ஊழியர்களின் குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்புகள் உள்ளன. இ பிளாக்கில் உள்ள வீடுகள் மிக மோசமான நிலையில் சிதிலமடைந்துள்ளதால் இந்த குடியிருப்பில் இருந்த பெரும்பாலோனோர் காலி செய்துவிட்டனர். இதனால் வீடுகளும், அதனை சுற்றியும் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.  குடியிருப்புகளை சுற்றிலும் அதிகப்படியான செடிகள், மழை நீர், கழிவு நீர் தேங்கி கொசுக்களின் கூடாரமாக உள்ளது. சிவகங்கை பழைய மருத்துவமனை கட்டிடங்கள் முழுவதும் பராமரிப்பின்றி புதர்மண்டிக்கிடக்கின்றன. மதுரை ரோட்டில் தனியார் பள்ளி எதிரே உள்ள நகராட்சி குடிநீர் தொட்டி மற்றும் அலுவலர் குடியிருப்பு உள்ள காம்பவுண்டுக்குள் நகர்ப்பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் தேவையற்ற பழைய பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இதில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவது இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்குகிறது. தனியார் வீடுகள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கும் நிலையில் உள்ள இடங்களையும் பார்வையிட்டு அங்கும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், சிவகங்கையில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள் ஏராளமானவை சிதிலமடைந்து மழை நீர் தேங்கும் இடமாக காட்சியளிக்கிறது. ரயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதையில் மாதக்கணக்கில் மழை நீர் தேங்குகிறது. யூனியன் அலுவலகம், மருத்துவமனை, உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைத்துள்ளனர். இதில் அனைத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. நகரில் உள்ள அனைத்து பகுதிளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. பெயரளவிற்கு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தனியார் இடங்கள் மட்டுமல்லாது அரசு அலுவலகங்களிலும் மழை நீர் தேங்கி கொசுப்புழு உருவாகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Tags : Mosquitoes ,
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை