×

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு

ஓமலூர், அக்.1: ஓமலூர் ஒன்றியத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு பணிகளை, ஊரக வளர்ச்சி இணை செயலர் நேற்று ஆய்வு செய்தார். ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில், பயனற்று கிடக்கும் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வெள்ளைக்கல்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயனற்று கிடந்த ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கிராமங்களில் உள்ள கிணறுகளை தூர்வாரி, மழைநீர் சேமிக்கும் வகையில் குழாய்கள் பதிக்கும் பணிகளும், கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள், குளங்கள் குடிமராமத்து பணிகளும் நடந்து வருகிறது. இதனால், தற்போது பெய்துவரும் மழைநீர் ஆழ்குழாய் கிணறுகள், ஏரிகள், குளங்களில் சென்று தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஓமலூர் ஒன்றியத்தில் செய்யப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை, ஊரக வளர்ச்சி துறை இணை செயலரும், சேலம் மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட தலைவருமான திருப்புகழ் நேற்று ஆய்வு செய்தார். மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றிய பொறியாளர்கள் சங்கர், மோகன் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். அனைத்து இடங்களிலும் மழைநீர் சேமிப்பு பணிகளை மேற்கொண்டு, ஏரிகள் குளங்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு பணிகளை வேகப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags :
× RELATED 6.5 பவுன், வெள்ளி பொருட்கள் திருட்டு