×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு டெண்டர் விடாமல் முறைகேடு

திருப்பூர்,அக்.1: திருப்பூரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு டெண்டர் விடாமல் முறைகேட்டில் ஈடுபடும் மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஒப்பந்ததாரர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரரான வேலுச்சாமி என்பவர் கலெக்டரிடம் மனு அளித்த பின் நிருபர்களிடம்கூறியதாவது: திருப்பூர், மாநகராட்சி பகுதியில் பல்வேறு ஒப்பந்த பணிகளை பல ஆண்டு காலமாக எடுத்து செய்து வருகிறேன். தற்போது ஸ்மார்ட்சிட்டி  திட்டத்தின் கீழ், மாநகராட்சி பல்வேறு பணிகளை மாநகரில் மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், பழைய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு, அங்கு புதிதாக பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் திருப்பூர் தாராபுரம் ரோடு கோயில் வழியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அங்கு பஸ் நிறுத்தும் இடங்கள், கடைகள் மற்றும் கழிவறை உட்பட அடிப்படை வசதிகளுக்காக ரூ. 1.30 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்கான மாநகராட்சி  ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்காக, நானும் விண்ணப்பித்திருந்தேன். கடந்த 26ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒப்பந்தப் புள்ளிகளின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. அரசு விதிமுறைகள் பின்பற்றவில்லை. ஒப்பந்தம் கோரும் விண்ணப்பதாரர்கள் அடங்கிய பெட்டியானது சீலிடப்படவில்லை. அதேபோல் ஒப்பந்தம் நிர்ணயிப்பதற்கு முன்பு 20 நாட்களுக்கு முன்கூட்டியே கோயில்வழியில் புதிய பஸ் நிலையத்தில் விண்ணப்பித்திருந்த மற்றொருவர் பணிகளை தொடங்கிவிட்டார். முறையாக ஒப்பந்தம் கோரப்படவில்லை.

இந்நிலையில், கோயில்வழியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகளும் படுவேகமாக நடைபெற்றுவருகின்றன. ஆகையால், இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே, கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன் கூறியதாவது: வேலுச்சாமி எனது அறையில் இருந்த மாநகராட்சி ஆவணங்களில் திருத்தம் செய்திருந்தார். கோயில்வழியில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையம் தொடர்பாக, ஒப்பந்தம் யாருக்கும் அளிக்கப்படவில்லை. அவசரத்துக்கான அடிப்படை பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. அதை யார் செய்கிறார்கள் உதவி செயற்பொறியாளரிடம் கேட்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...