×

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பண மோசடி பாஜ நிர்வாகிகள் மாறி மாறி போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: பாஜ ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்கு, பிரதமர் வீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக, பாஜவில் பலர் உறுப்பினராகி, பிரதமர் வீடு திட்டத்தில் பதிவு செய்தனர். இதற்கு பதிவு கட்டணம் ₹50 என தெரிகிறது. பொதுமக்கள், பாஜ தொண்டர்கள் என பலர் பிரதமர் வீடு திட்டத்தில் பதிவு செய்தனர். மேலும், பாஜ கட்சியின் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், இந்த வீடு திட்டத்தில் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில், பாஜ வடசென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் என்பவர், பிரதமர் வீடு திட்டத்தில், ராயபுரம் தொகுதியில் மட்டும், 2 லட்சம் வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக, மாவட்ட செயலாளர் விஜயகுமார் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகுமார், பாஜ வக்கீல் பிரிவு நிர்வாகி சதாசிவத்திடம் முறையிட்டு, தன் மீது அவதூறு பரப்பும் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில், கிருஷ்ணகுமார் சார்பாக வக்கீல் சதாசிவம் என்பவர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில், விஜயகுமார் மீது புகார் கொடுத்தார். அந்த புகார், ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக, நேற்று ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வைத்து, விஜயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கிருஷ்ணகுமார் மீது அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், “பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2017ம் ஆண்டில் நானும் 300 கொடுத்து, கிருஷ்ணகுமாரிடம் பதிவு செய்தேன். ஆனால், சக கட்சிக்காரர்களிடம் விசாரித்தபோது, பதிவு செய்ய 50 தான் கொடுக்க வேண்டும் என்றார்கள். நான், கிருஷ்ணகுமாரிடம் என்னிடம் ஏன் அதிக பணம் வாங்கினீர்கள் என கேட்டேன். மேலும், அவர் 20 ஆயிரம் கொடுத்தால், கட்சி மேலிடத்தில் பேசி வீடு திட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

மேலும், 2 ஆயிரம் பேரிடம் 300 தான் வாங்கியுள்ளேன். நீ மட்டும் ஏன் கேள்வி கேட்கிறாய் என கூறினார். இதனால், கோபம் அடைந்த கிருஷ்ணகுமார், என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார்” என குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கட்சிக்குள் பணம் மோசடி செய்ததாக, நிர்வாகிகளுக்குள் மாறி, மாறி புகார் கொடுத்த சம்பவம் ஆர்.கே.நகர் பகுதியில் பாஜ கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : executives ,Money Laundering Baja ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது