×

சிங்காரப்பேட்டையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஊத்தங்கரை, செப்.30: சிங்காரப்பேட்டையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர ேவண்டி உள்ளது. இதனால், காலையில் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சீரான குடிநீர் வழங்கக்கோரியும், அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்தும், அப்பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சிங்காரப்பேட்டை அண்ணா சிலை அருகில் திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Singarapet ,
× RELATED சூதாடிய 4 பேர் கைது