×

நமது உணவு பழக்கவழக்கமே பல நோய்களை குணமாக்கும்

கொடைக்கானல், செப். 26: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை மையத்தின் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. பெண்களின் நலன், ஊட்டச்சத்து பற்றிய இந்த கருத்தரங்கிற்கு தமிழ்த்துறை தலைவர் கமலி முன்னிலை வகித்தார். சமூகவியல் துறை தலைவர், காந்திய சிந்தனைகள் மைய ஒருங்கிணைப்பாளருமான ஹில்டா தேவி வரவேற்றார். கனடா நாட்டின் மானிட்டோபர் பல்கலைக்கழக உணவு மற்றும் குடும்ப மருத்துவத்துறை இணை பேராசிரியர் மீரா கௌர் தலைமை வகித்து பேசுகையில், ‘பெண்கள் தங்களது உடல் நலத்தை கவனிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் உண்ண பழகி கொள்ள வேண்டும். உடல் நலம், மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண சீரான உணவு, உடற்பயிற்சிகள் தேவை. பெண்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றை கண்டறிந்து தீர்வு காணும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் பருமன் குறித்த தீர்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பாலின் அவசியத்தை பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நமது உணவு பழக்கவழக்கமே இதயக்கோளாறு, கேன்சர், கால்சியம் குறைபாடு போன்ற பல நோய்களை குணமாக்கும்‘ என்றார். தொடர்ந்து அவர் பெண்களின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முத்து மீனலோசனி நன்றி கூறினார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்