×

திருந்திய நெல் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் என்ன?

பழநி, செப். 26: திருந்திய நெல் சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி என்ற முறையாகும். இச்சாகுபடியில் அதிக மகசூல் பெற தரமான சான்று பெற்ற வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். 1 ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதைகளை பயன்படுத்த வேண்டும். நாற்றாங்காலை 1 ஏக்கருக்கு 40 சதுரமீட்டர் என்ற அளவில் மண்மக்கிய தொழுஉரம் 9:1 என்ற வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவிகளை பயன்படுத்த வேண்டும். 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு 1 நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும்.

நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். 2.5 சென்டிமீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்தக்கூடாது. கோனோவீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும்  பாஸ்போபேக்டீரியா ஏக்கருக்கு தலா 7 பாக்கெட் பயன்படுத்த வேண்டும். பச்சை இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச்சத்தினை மேல் உரமாக இட வேண்டும். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு