×

குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது 6 ஆண்டு ஆகியும் நடவடிக்கை இல்லை

திருப்பூர், செப்.26:  குறைதீர்ப்பு கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது 6 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆர்டிஓ., செண்பகவள்ளி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தின் போது, கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது: ‘‘பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக இங்கு மனு அளிக்கப்படுகிறது. ஆனால் ஏராாளமான மனுக்கள் மீது 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகளாக சுமார் 300 பேர் வரை தினசரி சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். இந்த சுகாதார நிலையத்தில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்று சிகிச்சைப்பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், சுகாதார நிலையத்தை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே, கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மங்கலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில்  ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மருத்துவமனை கட்டிடட சுவர்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.  முதலிபாளையம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதியில் குட்டையோ, ஓடையோ வாய்க்காலோ என எதுவும் கிடையாது. கிணற்று நீர் மட்டுமே எங்களது நீர் ஆதாரமாகும். நாங்கள் அனைவரும் நிலத்தடி நீரை நம்பி தான் விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்து விட்டாதால் நிலத்தடி நீரும் வேகமாக குறையத் தொடங்கி கிாரமத்தில் உள்ள அனைத்து கிணறுகளும் வற்றத் துவங்கி விட்டது.சுமார் 1500 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகிறோம்.  கடந்த 12 ஆண்டுகளாக தனிநபர் ஒருவர், விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரை சட்டத்திற்கு புறம்பாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.
 இதையடுத்து ஆர்.டி.ஓ., செண்பகவள்ளி, விவசாயிகளின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags : meeting ,Ombudsman ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்