×

பிங்கர்போஸ்ட் - கலெக்டர் அலுவலகம் வரை மந்த கதியில் சாலை பணி

ஊட்டி, செப். 26:  ஊட்டி - கூடலூர் சாலையில் பிங்கர்போஸ்ட் முதல் கலெக்டர் அலுவலகம் வரை சாலை சீரமைப்பு பணி மிகவும் மெதுவாக நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்க கூடிய கூடலூர் - ஊட்டி - மேட்டுபாளையம் தேசிய ெநடுஞ்சாலை முக்கிய பாதையாக உள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் மேட்டுபாளையம், குன்னூர் வழியாக வருகின்றனர். இதனால் இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். வாகனங்கள் அதிகரிப்பு மற்றும் சீசன் சமயங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே சமயத்தில் ஊட்டிக்கு வருவதால் இச்சாலையில் கடும் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.   இதனால் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் நோக்கில் இந்த சாலையில் பல இடங்களில் கடந்த இரு ஆண்டுகளாக தடுப்புசுவர் கட்டுதல், பாலம் அமைத்தல், விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே ஊட்டி நகரின் நுழைவு வாயில் பகுதியாக இருக்க கூடிய வேலிவியூ பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் வரை சுமார் 6 கி.மீ., தூர சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு போன்றவை காரணமாக சாலை குறுகலாக இருந்தது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்கள், மண் திட்டுகள் ஆகியவற்றை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

  இதை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய், தடுப்புசுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. வேலிவியூ முதல் தலையாட்டிமந்து வரை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் தார் சாலை அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதில் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகின்றன. ஆனால் கலெக்டர் அலுவலகம் முதல் பிங்கர்போஸ்ட் வரை சாலை விரிவாக்க பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் தடுப்புசுவர் கட்டப்பட்ட நிலையில் தார் சாலை அமைக்கவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பிங்கர்போஸ்ட் முதல் கலெக்டர் அலுவலகம் வரை சாலை மேம்பாட்டு பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : recession ,Pinkpost - Road ,Collector's Office ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...