×

இளையான்குடி பகுதியில் சில்லறை தட்டுப்பாடு வியாபாரிகள் பாதிப்பு

இளையான்குடி, செப்.26: இளையான்குடி பகுதியில் கடும் சில்லறை தட்டுப்பாட்டால், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இளையான்குடி பகுதியில் சில்லறை தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. அதனால் காய்கறி கடை, பூக்கடை, மெடிக்கல், தரைவிரிப்பு கடைகள், தள்ளு வண்டிகடைகள், டீ கடை, மற்றும் பாத்திரக்கடை, பழக்கடை, மளிகை கடை, பெட்டிக்கடை ஆகிய சிறு வணிகம் சார்ந்த கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணத்தில் 100 ரூபாய் நோட்டுகள் சமீப காலமாக இல்லாததால், மக்கள் புழக்கத்திற்கு சில்லறை பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ.10, ரூ.20 ஆகிய நோட்டுகள் பழைய, கிழிந்த நோட்டுகளாக உள்ளதால், பொதுமக்கள் பெரும்பாலும் நாணயமாக எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நாணயங்கள் புழக்கத்தில் இல்லாததால், வியாபாரம் மந்த நிலையில் உள்ளது. சாதாரண நாட்களில், ஒரு நாளைக்கு சுமார் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகும் பழக்கடையில், இந்த சில்லறை தட்டுப்பாட்டால், வெறும் ரூ.800க்கு மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது. டீ கடைகளில் வெறும் ரூ.300 முதல் ரூ.700 வரை மட்டுமே டீ விற்பனையாகிறது. அதனால் இளையான்குடி பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த கடும் சில்லறை தட்டுப்பாட்டால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வியாபாரம் உள்ளிட்ட வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரி காவேரி கூறுகையில், ``சில்லறை தட்டுப்பாட்டால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கொண்டு வரும் ரூபாய்க்கு சில்லறை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். சில்லறை தட்டுப்பாட்டால் பொருளை கொள்முதல் செய்யவும் முடியவில்லை. விற்பனை செய்யவும் முடியவில்லை. அதனால் இளையான்குடி பகுதியில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : retail shortage traders ,area ,Ilangudi ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு