×

கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது

திருச்சி,செப்.26: கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, தலையாமங்களம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த கந்தபெருமாள் மகன் சுந்தரேசன்(55). திருச்சி பாலக்கரையில் உள்ள பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் முருகேசனின் அறிவுறுத்தல்படி ஊழியர்கள் 2 பேர் தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ. 1 கோடியை சென்னையில் இருந்து தங்கள் பேக்கில் எடுத்துக்கொண்டு கடந்த 26.10.2018 அன்று இரவில் பஸ்சில் புறப்பட்டு மறுநாள் காலை திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் வந்து இறங்கி பாலக்கரை செல்ல நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த நபர்கள் இவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த கண்டோன்மெண்ட் போலீசார் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை கடந்த 14.11.2018ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் முக்கிய குற்றவாளியான சென்னை கொடுங்கையூரைச்சேர்ந்த இம்ரான் (36) மற்றும் திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த பாஷா(எ)மாலிக் பாஷா(25) தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.1.50 லட்சத்தை கைப்பற்றினர். இந்நிலையில் இம்ரான் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் இருப்பதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் இம்ரானை போலீசார் குண்டாசில் நேற்று கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Gundasil ,
× RELATED குண்டாசில் வாலிபர் கைது