×

ஆலங்குடியில் இருதரப்பு மோதலில் தாலியை அறுத்து தாக்கிய பெண் கைது

புதுக்கோட்டை , செப்.26: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரண்டு பெண்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தாலிச்செயினை அறுத்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீழசுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் முருகேசன் (57). இவரது வீட்டிற்கு பின்புறம் அம்பேத்கார் நகரில் வசிக்கும் செல்வம் மனைவி பிரதீபா (22). இவர் தினமும் வீட்டில் சேரும் கழிவுகளை முருகேசன் வசிக்கும் வீட்டின் அருகே கொட்டியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, முருகேசன், பிரதீபாவிடம் கழிவுகளை கொட்டாதீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரதீபா மற்றும் அவரது மாமியார் சாந்தி ஆகியோர் முருகேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, முருகேசன் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தனது மகள் தமிழ்ச்செல்வியிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் முத்தரசன் இருவரும் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் செல்வம் மனைவி பிரதீபா, பிரதீபாவின் மாமியார் சாந்தி ஆகியோரிடம் இதுசம்மந்தமாக பேசியுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் கிடந்த தாலிச்செயினை சாந்தி அறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்ச்செல்வி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சாந்தி ஜெயிலுக்கு போக காரணம் உன் மகள் தான் என்று கூறி தமிழ்ச்செல்வியின் தந்தை முருகேசனை சிலர் செங்கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து, முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செல்வம் (28), பள்ளத்திவிடுதியை சேர்ந்த வேலு மகன் ராசப்பன் (எ) பாலகிருஷ்ணன் (57) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அம்பேத்கர் நகரைச் சேர்ந்த செல்வம் மனைவி பிரதீபா, பள்ளத்திவிடுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராகுல் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Tali ,clash ,Alangudi ,
× RELATED ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண் பலி