×

திருச்செங்கோடு அருகே தம்பதியை கொன்று நகை கொள்ளை வாலிபருக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல், செப்.25: திருச்செங்கோடு அருகே தம்பதியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே போக்கம்பாளையம் கரட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(75). இவரது மனைவி பெருமாயி(70). இவர்களது மகன்கள் நல்லதம்பி, சுப்பிரமணியம் ஆகியோர் திருச்செங்கோட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஊரில் உள்ள விவசாய நிலத்தை குப்புசாமி என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். இவர், தினமும் பால் கறந்து நல்லதம்பியின் பெற்றோருக்கு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25.10.2011ம் தேதி நல்லதம்பி பால் ஊற்றுவதற்காக சென்றபோது, முத்துசாமி- பெருமாயி வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 5 கிராம் தங்கத்தாலி மற்றும் 3 கிராம் தங்கத்தோடு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து நல்லதம்பி அளித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், குமாரமங்கலம் காந்திநகரைச் சேர்ந்த பாலாஜி(20) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோர் தம்பதியை கொலை செய்து நகைககளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இவர்கள் மீதான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் நேற்று, குற்றம்சாட்டப்பட்ட பாலாஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது வாலிபர் மீதான விசாரணை நாமக்கல் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்