ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆதார், செல்போன் எண் இணைக்கும் முகாம்

ஊட்டி, செப். 25:   ஸ்மார்ட் ரேஷன் கார்டில் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள் ேசர்க்கும் முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 407 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 314 குடும்பங்களுக்கு ஏற்கனவே மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 784 பேர் அந்தந்த ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்த 6 லட்சத்து 50 ஆயிரத்து 784 நபர்களில், 6 லட்சத்து 43 ஆயிரத்து 399 பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரத்து 395 நபர்களுக்கு அவர்களின் ஆதார் எண் அந்தந்த ஸ்மார்ட் ரேஷன் அட்டையுடன் இணைக்க வேண்டியுள்ளது.

 இதில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவர். மேலும், 2 லட்சத்து 12 ஆயிரத்து 314 குடும்ப அட்டைதாரர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 855 மின்னணு குடும்ப அட்டைகளில் மட்டுமே அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1459 குடும்ப அட்டைகளுக்கு செல்போன் எண்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஆதார் எண் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யும் பொருட்டு நிலுவையில் உள்ள குடும்ப அட்டைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அந்தந்த இ-சேவை மையங்களில் ஆதார் எண் எடுப்பதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இணைக்க விடுப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 இதற்கான முகாம் 30ம் தேதி நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை ஸ்மார்ட் ரேஷசன் கார்டுடன் பதிவு செய்து கொள்ளலாம். தவறும்பட்சத்தில் பதிவு செய்யப்படாதவர்கள் குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு இன்னசென்ட்திவ்யா கூறியுள்ளார்.

Related Stories:

>