×

கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, செப்.25: கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தை பகத்சிங் மன்றத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஆண்டிகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு தோணுகால் மலையில் இருந்து நீர்வரத்து ஓடை மூலம் தண்ணீர் வந்து சேரும். இக்கண்மாயில் தேங்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடையையும், வருவாய்த்துறைக்கு சொந்தமான தோணுகால் மலைக்குன்று ஆகியவைகள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்றவும், தோணுகால் மலை பகுதியில் வளர்ந்திருந்த சந்தனமரங்கள், தேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பகத்சிங் மன்ற நிர்வாகிகள் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீத்தாராமன் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 மன்றத்தின் மாவட்ட தலைவர் உத்தண்டராமன், ஆட்டோ சங்க தலைவர் கொம்பையா, மாவட்ட விவசாய குழு தலைவர் சின்னச்சாமி, பெண்கள் பாதுகாப்புகுழு தலைவர் சுந்தரி, நரிக்குறவர் சங்க தலைவர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து கோரிக்கை மனுவை ஆர்டிஓ அலுவலக உதவியாளர் நிஷாந்தியிடம் அளித்தனர்.

Tags : Kovilpatti RTO ,office blockade ,
× RELATED இளையரசனேந்தல் பிர்கா விவகாரம்...