×

அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல கருவூலம் மூலம் சம்பளம் வழங்க ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, செப்.24: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல ஊராட்சி செயலாளர்களுக்கும் கருவூலம் மூலமாக சம்பளம் வழங்க அரசுக்கு தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்க 10வது மாநில பொதுக்குழு கூட்டம், கவரப்பேட்டையில்  நடைபெற்றது.  கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் கே.முரளி,  செயலாளர் எம்.முரளி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் சிட்டிபாபு, பொதுக்குழு உறுப்பினர் குருமூர்த்தி, மீஞ்சூர் ஒன்றிய தலைவர் பி.எல்.கே.பாபு, கர்ணா, பொருளாளர் சசிக்குமார், ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில நிர்வாகி டி.சாமுவேல் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் வை.தர்மராஜா, பொருளாளர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் விளக்க உரையாற்றினர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் மாநில தலைவர் கே.வாசுதேவன் பேசுகையில், “ஊராட்சி செயலாளர்களுக்கு பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல கருவூலம் மூலமாக சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மத்திய அரசின் பல திட்ட பணிகளை செய்யும்போது பணி பளு மற்றும், மன உளைச்சலால் அவதிப்படுவதால் அவர்களுக்கு மாத சிறப்பு படியாக ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் கூட்டத்தில் புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  1996 முதல் 2004 வரை உள்ள ஊதிய நிலுவை தொகை கோருவது தொடர்பாகவும், பெண் ஊராட்சி செயலாளருக்கு 9 மாதம் மகப்பேறு விடுப்பு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய பொருளாளர் சோபன்பாபு நன்றி கூறினார்.

Tags : Treasury ,Government ,
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...