×

என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி மந்தம்

ஊட்டி, செப்.20:ஊட்டியில் உள்ள என்சிஎம்எஸ்., பார்க்கிங்கில் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவு பெறாமல் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கடந்த சில ஆண்டுக்கு முன் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள என்சிஎம்எஸ்., வளாகத்தில் இருந்த காலியிடம் பார்க்கிங் தளமாக மாற்றப்பட்டது. இந்த இடம் மைதானமாக இருந்ததால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க என்சிஎம்எஸ்., நிறுவனம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தது. கடந்த இரண்டு ஆண்டாக இந்த பார்க்கிங் தளத்தில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிகள் மற்றும் 25 கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி மற்றும் கடைகள் அமைக்கும் பணிகளும் முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதனால், இங்கு வாகனங்கள் நிறுத்த வழியின்றி வேறு பார்க்கிங் தளங்களை தேடி சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

இதனால், என்சிஎம்எஸ்., வளாகத்தில் சிறிய கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனையாவதில்லை. என்சிஎம்எஸ்., நிறுவனத்திற்கு கிடைத்து வந்த கனிசமான தொகையும் தற்போது கிடைப்பதில்லை. மேலும், இரண்டாம் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவித்தவுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வரும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி சுற்றுலா வரும் மாணவர்கள் பஸ்கள் மூலம் அதிகம் வருவார்கள். ஆனால், அவர்களது வாகனங்கள் இந்த பார்க்கிங் தளத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை