×

திருமயம் அருகே விபத்துகளை ஏற்படுத்த துடிக்கும் சாலை தடுப்பு

திருமயம், செப்.17: திருமயம் அருகே தேசிய சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலை தடுப்புகளை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாம்பாறு பாலம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் திருமண வரவேற்பு விருந்து ஒன்று நடைபெற்றது. இதில் அரசியல் முக்கிய தலைவர்கள் வருகையால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. இதனால் திருமயம் காவல் துறை சார்பில் திருமண மண்டபம் எதிரே உள்ள தேசிய சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல சாலை தடுப்புகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சி முடிந்த பல நாட்கள் ஆன நிலையில் சாலை தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலை தடுப்புகளை சாலையோரம் நகர்த்தி வைத்துள்ளனர். இதில் ஒரு தடுப்பு மட்டும் வாகனம் செல்லும் சாலையில் குறுக்கே உள்ளதால் விபத்து நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் சாலையின் குறுக்கே உள்ள சாலை தடுப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன் திருமயம் அருகே உள்ள புலிவலம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு விபத்துகள் அடுத்தடுத்து நடந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ஏனப்பட்டி, புலிவலம் விலக்கு அருகே சாலை தடுப்புகள் அமைத்தனர். இந்நிலையில் தற்போது சாலை தடுப்புகள் பராமரிப்பின்றி அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் ஆனாதையாக கிடக்கிறது. இதனால் துருப்பிடித்து சாலை தடுப்புகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே வேலை முடிந்ததும் சாலை தடுப்புகளை முறையாக பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : accidents ,Thirumayam ,
× RELATED சொந்த ஊர் நடந்து செல்லும் வழியில்...