×

அப்பர்பவானி அணையில் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

மஞ்சூர், செப்.15:  அப்பர்பவானி அணையில் இருந்து 3 நாட்களுக்கு பின் நேற்று நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணை 210அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ளது. அப்பர்பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின்நிலையங்களில் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அப்பர்பவானி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் அணை நிரம்பியது. இதையடுத்து அணை திறக்கப்பட்டு தொடர்ந்து 6 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் நீர் வரத்து அதிகரித்து அப்பர்பவானி அணை மீண்டும் நிரம்பியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி இரவு அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டது. அணையின் இரு மதகுகள் மூலம் வினாடிக்கு 520 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் அணைக்கான நீர் வரத்தும் குறைந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை அப்பர்பவானி அணையில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. அப்பர்பவானி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மலைப்பாதை வழியாக கேரளாவில் சுமார் 30 கி.மீ துாரம் பயணித்து மீண்டும் தமிழகத்தின் முள்ளி வழியாக பில்லுார் அணையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Water Disposal Stop ,Upper Parbhani Dam ,
× RELATED இரவு 11 மணி வரை உணவு விடுதிகளை திறக்க கோரிக்கை