×

துடியலூர் சந்தையின் ஒரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்கு எதிர்ப்பு

பெ.நா.பாளையம், செப். 11:  கோவை அடுத்த துடியலூரில் உள்ள வார சந்தையில் ஒரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை அடுத்த துடியலூர் பஸ் நிலையம் அருகே ஒவ்வொரு திங்கட்கிழமையும் வார சந்தை நடக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையக்கூடிய காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதேபோல் கால்நடை சந்தையும் நடக்கிறது. இந்த சந்தையின் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு குப்பைக் கழிவுகளை தரம் பிரிக்கும் பணி நடக்க இருப்பதால், சந்தையின் தன்மை கெட்டுவிடும் என்று பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை செய்து வருவதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று மாலை துடியலூர் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ., துணை செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் பேசினார். திமுக., மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுப்ரமணியன், பச்சைமுத்து, முன்னாள் எம்எல்ஏ., அறுமுகம், சி.பி.எம். ராமமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ பாதுஷா, விவசாயிகள் சங்கம் ரங்கநாதன், முன்னாள் கவுன்சிலர்கள், ஆலய மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், அரவான் கோயில் நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும்  500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் திடக்கழிவு மேலாண்மை வாரியத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்பை வெளிப்படுத்தினர்.

Tags : Area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...